Posted by Editor on December 4th, 2012

Aduthakattam Movie News
பெரும்பாலும் தமிழ்சினிமாக்களில் பாடல்காட்சிகளுக்காத்தான் வெளி நாடுகளுக்குப் பயணமாவார்கள். அதுவும் இங்கிருந்து செல்லும் தொழில் நுட்பக்கலைஞர்களைக் கொண்டுதான் அதனைப் படமாக்கியும் வருவார்கள். முதல் தடவையாக ஒரு தயாரிப்பாளர் மட்டும் மலேசியா, சிங்கப்பூருக்குச் சென்று அங்கிருக்கும் தமிழ் நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்களைக் கொண்டு மிரட்டும் ஒரு திகில் பட்த்தை எடுத்து வந்திருக்கிறார்கள். அடுத்த கட்டத்திற்கு சென்றிருக்கிறார்கள் என்று நினைக்கத் தோன்றுகிறதா..? படத்தின் பெயரும் “அடுத்த கட்டம்” தான்.
அஸ்வின் ஸ்டுடியோஸ் ஆருர்சுந்தரம், பி.எம்.முகமது மொய்தீன், பி.எம்.ஜெயிலுல்லாப்தீன் வழங்கும் NGP Films நவநீதன் கணேசன் தயாரிப்பில் உருவான அடுத்த கட்டம் படத்தின் முன்னோட்ட வெளியீடு சென்னை பிரசாத் லேப்பில் நடந்த்து. நடிகர்கள் ஸ்ரீகாந்த்,சம்பத் இயக்குனர்கள் வா.கெளதமன், இயக்குனர் ராஜகுமாரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இயக்குனர் வா.கெளதமன் பேசும் போது, “தயாரிப்பாளர் ஆரூர் சுந்தரம் திரைப்பட இயக்கத்தில் DFT –படித்தவர். 12 வருடங்களாக நல்ல படங்களைத் தரக்காத்திருக்கும் சினிமா ரசனையுள்ளவர். தயாரிப்பாளாராக இங்கிருந்து சென்று முழுக்க முழுக்க மலேசிய-சிங்கப்பூர் நடிகர்களையும் தொழில் நுட்பக்கலைஞர்களையும் வைத்து அட்டகாசமான ஒரு திகில் பட்த்தை எடுத்து வந்திருக்கிறார்கள். சாதாரணமாக்க் கிடைக்கும் வெளிச்சத்தில் படம் பிடித்திருப்பதும் அருமையாக இருக்கிறது. இங்கே தமிழ்ப்படங்கள் எடுப்பவர்களைக் கிண்டல் செய்பவர்களும் இருக்கிறார்கள். திரைப்படங்களில் இருப்பவர்கள் தான் திரைப்படங்களைக் கொச்சைப் படுத்தவும் செய்கிறார்கள்.சக கலைஞனைக் கொண்டாட வேண்டாம் அதே நேரம் அவன் மனதைப் புண்படுத்தாமலாவது இருக்கலாம் அல்லவா… இங்கே ஜெயித்தாலும் பார்ட்டி கொடுக்கிறார்கள்…தோற்றாலும் பார்ட்டி கொடுக்கிறார்கள்… படம் சரியில்லை மொக்கை என்று முதல் ரீல் பார்த்துக் கொண்டிருக்கும் போதே “மெசேஜ்” அனுப்பி விடுகிறார்கள். தமிழ்சினிமாவை நாம் கொண்டாடவில்லையென்றால் வேறு யார் கொண்டாடுவார்கள்..? அதே நேரம் துளசிசெடிக்குத் தண்ணீர் ஊற்றாமல் கஞ்சா செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றி செழித்து வளரச்செய்வதும் இங்குதான் நடக்கிறது. சமுதாயத்தைச் சீரழிக்கும் எந்த ஒரு திரைப்படமும் இங்கே ஓடக்கூடாது…” என்று பேசினார்.
நடிகர் ஸ்ரீகாந்த் பேசும்போது, “திறமை எங்கிருந்தாலும் வரவேற்பதுதான் நமது பண்பாடு… மலேசிய-சிங்கப்பூர் திறமைசாலிகளை ஊக்குவிக்கும் விதமாக எடுக்கப்பட்ட அடுத்த கட்டம் வெற்றிபெற வாழ்த்துகிறேன்..” என்றார்.
தயாரிப்பாளர் நவநீதன் கணேசன் பேசும் போது, “திகில் படம் விறுவிறுப்பாக இருக்கவேண்டும் என்பதற்காகத் தான் பாடல்கள் இல்லாமல் எடுத்திருக்கிறோம்… முழுக்க முழுக்க மலேசிய-சிங்கப்பூர் கலைஞர்களைக் கொண்டு அடுத்த கட்ட்த்தை தயாரித்த்து போல தமிழக்க் கலைஞர்களும் மலேசிய சிங்கப்பூர் கலைஞர்களும் சேர்ந்து பணியாற்றும் படங்கள் தயாரிக்கும் எண்ணமும் உள்ளது. தமிழக்க் கலைஞர்களுடன் சேர்ந்து பணியாற்றும் போது அவர்கள் நிறையக் கற்றுக் கொள்வார்கள், படைப்பும் நன்றாக வரும்..” என்றார்.
அஸ்வின் ஸ்டுடியோஸ் ஆருர்சுந்தரம், பி.எம்.முகமது மொய்தீன், பி.எம்.ஜெயிலுல்லாப்தீன் தமிழகம் முழுவதும் அடுத்த கட்ட்த்தைத் திரையிடவுள்ளனர்.


